sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
கறைக் கண்டன் சருக்கம்
12.480 கணம்புல்ல நாயனார் புராணம்   ( )
12.490 காரிநாயனார் புராணம்   ( )
12.500 நின்ற சீர் நெடுமாற   ( )
12.510 வாயிலார் நாயனார் புராணம்   ( )
12.520 முனையடுவார் நாயனார் புராணம்   ( )

Back to Top
12.480 கணம்புல்ல நாயனார் புராணம்  

திருக்கிளர்சீர் மாடங்கள்
திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத்
தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன்
மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப
திவ்வுலகில் விளங்குபதி.
[1]
அப்பதியில் குடிமுதல்வர்க்
கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா
எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால்
உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர்
கழல்என்னும் விருப்புடையார்.
[2]
தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச்
சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.
[3]
தில்லைநகர் மணிமன்றுள்
ஆடுகின்ற சேவடிகள்
அல்கியஅன் புடன்இறைஞ்சி
அமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச்
சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி
எரித்துவரும் அந்நாளில்.
[4]
ஆயசெயல் மாண்டதற்பின்
அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த
கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து
விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார்
துளக்கறுமெய்த் தொண்டனார்.
[5]
இவ்வகையால் திருந்துவிளக்
கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக்
கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது
ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி
அணிவிளக்கா யிடஎரிப்பார்.
[6]
முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.
[7]
தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.
[8]
மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
[9]

Back to Top
12.490 காரிநாயனார் புராணம்  

மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
[1]
அங்கவர்தாம் மகிழும்வகை
அடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பால்
பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கண்அரா வொடுகிடந்து
விளங்கும்இளம் பிறைச்சென்னிச்
சங்கரனார் இனிதமரும்
தானங்கள் பலசமைத்தார்.
[2]
யாவர்க்கும் மனமுவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம்
மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்.
[3]
ஏய்ந்தகடல் சூழுலகில்
எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா
அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம்
அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும்
வடகயிலை மலைசேர்ந்தார்.
[4]
வேரியார் மலர்க்கொன்றை
வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி
அவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை
வழுதியர்தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர்
திருத்தொண்டு செப்புவாம்.
[5]

Back to Top
12.500 நின்ற சீர் நெடுமாற  

தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.
[1]
அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம்பெருகச்
செங்கோலுய்த்து அறம்அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச்
சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட
பொன்னார மணிமார்பில்
புரவலனார் பொலிகின்றார்.
[2]
ஆயஅர சளிப்பார்பால்
அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர்
நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும்
பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை
பரப்பியமர் கடக்கின்றார்.
[3]
எடுத்துடன்ற முனைஞாட்பின்
இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும்
பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந்
தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம்
வடிவேல்வாங் கிடப்பெருக.
[4]
வயப்பரியின் களிப்பொலியும்
மறவர்படைக் கலஒலியும்
கயப்பொருப்பின் முழக்கொலியும்
கலந்தெழுபல் லியஒலியும்
வியக்குமுகக் கடைநாளின்
மேகமுழக் கெனமீளச்
சயத்தொடர்வல் லியுமின்று
தாம்விடுக்கும் படிதயங்க.
[5]
தீயுமிழும் படைவழங்கும்
செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக்
குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள்
பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய
உணவளித்த தெனப்பிறங்க.
[6]
இனையகடுஞ் சமர்விளைய
இகலுழந்த பறந்தலையில்
பனைநெடுங்கை மதயானைப்
பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து
முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை
பூழியர்வேம் புடன்புனைந்து.
[7]
வளவர்பிரான் திருமகளார்
மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந்
தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க்
கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி
அருள்பெருக அரசளித்தார்.
[8]
திரைசெய்கட லுலகின்கண்
திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி
ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம்
அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத்
தின்புற்றுப் பணிந்திருந்தார்.
[9]
பொன்மதில்சூழ் புகலிகா
வலர்அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார்
செங்கமலக் கழல்வணங்கிப்
பன்மணிகள் திரையோதம்
பரப்புநெடுங் கடற்பரப்பைத்
தொன்மயிலை வாயிலார்
திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
[10]

Back to Top
12.510 வாயிலார் நாயனார் புராணம்  

சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.
[1]
நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.
[2]
கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றும்முத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமும்
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.
[3]
தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி
பவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி
உவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால்.
[4]
வீதியெங்கும் விழாவணி காளையர்
தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்
ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.
[5]
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.
[6]
வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதல் தோன்றியே
நாய னார்திருத் தொண்டில் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்.
[7]
மறவாமை யால்அமைத்த
மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும்
ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம்
எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும்
அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.
[8]
அகமலர்ந்த அர்ச்சனையில்
அண்ணலார் தமைநாளும்
நிகழவரும் அன்பினால்
நிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாட்செய்து
சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்.
[9]
நீராருஞ் சடையாரை
நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால்
அருச்சனைசெய் தடியவர்பால்
பேராத நெறிபெற்ற
பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர்
முனையடுவார் திறம்உரைப்பாம்.
[10]

Back to Top
12.520 முனையடுவார் நாயனார் புராணம்  

மாறு கடிந்து மண்காத்த
வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில்
நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு
மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ்
செல்வ நீடூர் திருநீடூர்.
[1]
விளங்கும் வண்மைத் திருநீடூர்
வேளாண் தலைமைக் குடிமுதல்வர்
களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார்
கழலிற் செறிந்த காதல்மிகும்
உளங்கொள் திருத்தொண் டுரிமையினில்
உள்ளார் நள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவர் அடியார்க்கு
மாறா தளிக்கும் வாய்மையார்.
[2]
மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்
வந்து தம்பால் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினால்
அதனை நடுவு நிலைவைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால்
கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த
பொன்னுங் கொண்டு மன்னுவார்.
[3]
இன்ன வகையால் பெற்றநிதி
எல்லாம் ஈச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக்
கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறிதயிர்பால்
கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா
வழித்தொண் டாற்றி வைகினார்
[4]
மற்றிந் நிலைமை பன்னெடுநாள்
வையம் நிகழச் செய்துவழி
உற்ற அன்பின் செந்நெறியால்
உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து
பிரியா வுரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவார்
என்னு நாமம் முன்னுடையார்.
[5]
யாவர் எனினும் இகலெறிந்தே
ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார்
விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி
விளங்கச் செங்கோல் முறைபுரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர்
தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.
[6]
செறிவுண்டென்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்குக் குறியுண்டு ஒன்றாகிலும் குறையொன் றில்லோம் நிரையும் கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழி பறிக்கப் பறியுண்டவர்எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.
[7]

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_nool.php?book_name=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&author=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&lang=kannada;